பலவீனம்!

என்னை ஒரு ‘பலவீனன்’ என்றுரைத்தாய் நண்பா இதிலென்ன ஆச்சரியம் அடடாவோ அடடா! இந்நிலத்து மாந்தரெலாம் ஏற்றுகிற மொழியாம் ‘இங்கிலீசு’ மொழியருமை என்னுளமும் ஒப்பும் மன்னுமறை வேதியரின் வேதமொழி யான மறைமொழியாம் சமஸ்கிரத மாண்புதெரிந் திடினும் என்னருமை தமிழ்த்தாய்க்கு இன்னொருத்தி ஈடோ என்றெண்ணும் பலவீனம் எனதுபல வீனம்!

காதலுக்கு வாழ்த்துரைக்கும் கடியபல வீனம் களவாழ்வைப் போற்றுகிற கவிதைபல வீனம்! சாதலுக்கும் வாழ்வுக்கும் சலியாமல் எதையும் சமமாக ஏற்கின்ற சமத்வபல வீனம்! மேதைகளின் சரிதத்தை மென்மேலும் மேலும் மீட்டுகிற பலவீனம்! மேலும்உல கத்தே ஏதினிமேல் பலவீனம் இயம்பிவிடுவாய் நண்பா இத்தனையும் என்னிடத்தே எய்துபல வீனம்!

கல்லூரிப் பட்டங்கள் தாங்கி அலை வோரை காலாட்டிக் கொண்டுழைக்கும் கனவான்கள் தம்மை செல்வாய செல்வங்கள் சேர்த்துவைத்தும் வாழ்வைச் செம்மையிலே ஓட்டாத சின்னவர்கள் தம்மை சொல்லாத பலவீனம் சொந்தமெனக் காயின் சோர்ந்துவிடப் போவதிலை! வேந்தர்களின் முன்பும் நல்லவரை நாடுய்ய உழைப்பவரைக் காணின் நலிந்துருகும் பலவீனம் நமதுபல வீனம்!

கொள்கை நெறி மாறாத கொடியபல வீனம் கொடியவரைக் கூடாத நெடியபல வீனம், வள்ளல் எனத் தமிழ் அள்ளி வழங்குபல வீனம் வாயாலே வீணர்களை வாட்டுபல வீனம் எள்ளிநகை யாடியெங்கள் இனஉரிமை விற்கும் எட்டப்பர் கூட்டத்தைக் குட்டுபல வீனம் கொள்ளையன்பா பலவீனம்! வெளவாலைப் போலும் கொள்கைவிற்கும் பலவீனம் என்னிடத்தே இல்லை!

என்னன்புத் தாய்நாடே இனியேனும் செவியை
என்பக்கம் தாவென்று ஏங்குபல வீனம்!
என்னருமை இளைஞர்களே தாய்நாட்டின் ஏற்றம்
எண்ணி உழைத் திடுகவெனச் சொன்னபல வீனம்!
இன்னுமின்னும் இப்படியே பலவீனம் கோடி
இருக்கு தன்பா இவையெல்லாம் எனதுபல வீனம்
உன்போலும் வீரனில்லை என்றாலும் சொந்த
ஊரைவிற்று உண்ணமனம் ஒப்பவிலை! ஒப்பா?

  •  17.4.60 சுதந்திரன்
  • ஒத்திகை 2006

Leave a Reply