நீலாவணன் பற்றி

கவிஞர் நீலாவணன் 30 ஜூன் 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர்.

பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்‘ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று “நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டு விட்டுக் கவிதையையே எழுதுங்கள்” என்று அன்புக் கட்டளை இட்டார். அதனை ஏற்று நீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை எதிர்மாறாக உள்ளது.

1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுதாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற நீலாவணன் காலாக இருந்தார்.

அகில இலங்கை ரீதியாக, தினகரன் பத்திரிகை மூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, ‘மழைக்கை’ கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவை யாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவு திரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உற்சாகமாக செயற்பட்டார்.

‘மழைக்கை’ கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம் அறுசீர் விருத்தப் பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு. சடாட்சரம்- கர்ணன், நீலாவணன்- குந்திதேவி, மருதூர்க்கொத்தன்- கிருஷ்ணன், எம். ஏ. நுஃமான்- இந்திரப் பிராமணன், மருதூர்க்கனி- பிராமணன், கே. பீதாம்பரம்- இந்திரன் என்று பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது. ‘மழைக்கை’ 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.

1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் ‘பாடும் மீன்‘ இதழை -நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு- அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.

1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர்- சண்முகம் சிவலிங்கம், செயலாளர்- மு. சடாட்சரன், கௌரவ ஆசிரியர்- நீலாவணன், காப்பாளர்- கே. ஆர். அருளையா B.A) ‘பாடும் மீன்‘ என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். இரண்டு இதழ்களே வந்தாலும் அதற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.

11- 01- 1975ல் இயற்கை எய்தினார்.

1976ல் இவரது ‘வழி‘ என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.

1982ல் நீலாவணனின் ‘வேளாண்மை‘க் காவியம் நூலுருவாக வெளிவந்துள்ளது.

2001ல் ‘ஒத்திகை‘ (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது. இவரது கதைகள் அனைத்தும் ‘ஒட்டுறவு‘ என்ற நூலாகவும் கவிதை நாடகங்கள் ‘நீலாவணன் கவிதை நாடகங்கள்‘ என்ற நூலாகவும் வெளிவந்துள்ளன.

கவிதை நாடக நூலுக்கு சாகித்திய மண்டலப் பரிசும், வடகிழக்கு மாகாண சபை இலக்கிய விருதும் கிடைத்துள்ளன.

இவரது துணைவியார் திருமதி அழகேஸ்வரி சின்னத்துரை, பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர்.