வண்ணக்கர் கண்ணாப் போடி

தவறணைக்குள்ள பிறந்து குடிகுடியெண்டு குடிக்கயள்… இன்னும் போத்தலோட அண்ணாந்து ஊத்தத் தெரியுதில்ல.. நீங்கெல்லாம் என்ன குடிக்கயள்…சை..!

நடுச்சாமத்தில – கோயிலுக்குப் பின்னால இந்தச் சூரப்பத்தக் காட்டுக்குள்ள.. கிளாசுக்கும் கோப்பைக்கும் எங்க போறது? எனக்கெண்டால் அந்த மண்ணாங்கட்டி ஒண்டும் தேவல்ல! ஆறு போத்தலையும் அண்ணாந்து ஊத்திப் போட்டு அசையாமல் இருப்பன்.

இந்தப் பனம்பழ மூளுக்குள்ள ஊத்தி அடியுங்க. சோக்கான சாமான்! ஒரு போத்தல் கொள்ளும். எப்பிடி எண்ட மூள? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். என்ன ரெட்டத்தலையன் எண்டு சொல்றது இதுக்குத்தான் கண்டியளோ! எதுக்கும் ரெட்டமூளயப் போட்டுத்தான் செய்வன்.

என்னகா பூசாரிச் சின்னப்பா பொங்கலுக்கும் நேரமாகுது. பூசக்காறன் தேடப் போறான். எடன் எடன் பனங்கா மணத்தால் மணக்கட்டும் ஊத்தியடியன். நான் வீட்ட ஒள்ளுப்பம் பொயித்து வரப் போறன். துள்ளுமா நேத்திக்கடனாக வந்த மாக்கும்பம் புளிச்சுப் போகும். மூட்டகட்டி வச்சிருக்கன். நேரத்துக்குக் கொண்டு வீட்ட போட்டால்… அதுகள் புட்ட இடியப்பத்த அவிச்சிப் பேத்தியாக்கிப் போடுங்கள். அரிசும் ஒரு சாக்குக் கட்டி வச்சிற்றன். அது பூசாரிச் சின்னப்பனுக்குத் தான். புறகு கொண்டு போகலாம். இப்ப இந்த மாவக் கொண்டு போய்ப் போட்டுத்து வாறன்.

இந்தக் காலத்தில நம்மட விருப்பத்துக்கு ஒண்டும் செய்ய முடியாமக் கிடக்கு. அஞ்சாறு குட்டி இளந்தாரிமார் தலைப்பட்டு ஊரப் பழுதாக்கத் தொடங்கீற்றானுகள். அம்மன் கோயிலுக்கு வாற வருமானத்தப் பத்திக் கேக்கிறதுக்கு இவயளுக்கு அதிகாரம் குடுத்தது ஆரெண்டு கேக்கிறன்? அதெல்லாம் கணக்கு வழக்கும் பாக்கத்தானே குடி வண்ணக்குமார் நாங்க இரிக்கம். பூசாரிச் சின்னப்பன் இரிக்கார்! இந்த இளந்தாரிமார் எத்தினையாம் ஆண்டில முளைச்சாக்கள்? வண்ணக்குமாரப் பத்தி அதிலயும் என்னப் பத்தித்தான் கண்ட கண்ட மாதிரிக் கதகாலுகள் உண்டாகுது! இஞ்ச.. நானும் பாத்துப் பாத்து வாறன் கண்டயோ… ஒரு நாளைக்கு இவியளக் கொண்டு பூட்டுற மாதிரிப் பூட்டாட்டி நானும் வண்ணக்கு கண்ணாப்போடி இல்ல! வளிசல்கள்…

அம்மாளுக்கு சாராயப் போத்தல் எத்தின வந்தது. கள் எத்தின கலன்? கோழி எத்தின? முட்ட எத்தின? சேல புடவ எத்தின?

இதெல்லாம் இவியளுக்கு சொல்ல வேணுமாக்கும்? நாய்க்கேன் தோல் தேங்காய்? இல்ல இவியதான் ஊரா?

அடேய் நாய்ப் பயலுகளே… சாராயம், கள்ளு, கோழி, முட்ட எங்கட கோயிலுக்குத் தாண்டா இந்தச் சிலோன் தேசத்திலேயே ஏராளமாக வாறது!

வந்தா… அது அம்மாளுக்கா வாறது. அம்மாள ஆட்டுக் காட்டிப் பாட்டுப் பாடுறவனுகளுக்கு தான் வாறது. எட்டு நாளைக்கு இரவு பகலா நெஞ்சுடைக்கிற பூசாரியும் வண்ணக்குமாரும் நெஞ்சு நோவுக்குக் கொண்டு போய் முட்டயக் குடிக்காம என்ன செய்வான். அதக் கேக்கிறதுக்கு நீங்கெல்லாம் ஆருடா?

நல்ல வடிவு வடிவான பட்டுச் சீலயள்.. கண் கொண்டு பாக்கொண்ணாத சீலயள். கூறச்சீலயள் தான் அதெல்லாம்… வருஷத்தில ஒண்ட ரெண்ட வண்ணாக்குப் பூசாரி கொண்டு போறத்தில இவியளுக்குக் கடுக்குது? இந்தக் கோயில நம்பிக் கிடக்கிறவன் கோயிலுக்கெண்டு வாறத அனுபவிச்சால் என்ன? அம்மாள் குடுக்காவு.. நான் எண்ட புள்ள குட்டிக்குக் கொண்டு கொடுக்கன். அதப்பத்தி நீங்க கேட்டால்.. செருப்பால அடிப்பன்!

கோயில் ஆதன பாதனம் கொம்மையும் கொப்பனுமா குடுத்தவங்க…? எண்ட குடியான் குடுத்தவன். கோயில் தோட்டத்தில கள்ளன் காவாலி தேங்கா களவெடுக்காமல் காலிப் புள்ளயள் இளனி பிய்யாமல் ஆடு மாடு வராம பார்க்கிறவன் நான்… கோயில் தேங்காயெல்லாம் நான்தான் ஆயிறன்… தின்னுறன்.. ஓம்.. ஆயிறந்தான். பாத்து மேச்ச எனக்குச் சொந்தமில்லாம எண்ட முன்னோன் குடுத்த முதுசத்தில காய்க்கிற தேங்காய் வேற ஆருக்குடா உரும… சாமி காவல் பாத்தவரா..? கோயிலுக்குக் குடுக்க…

புள்ளயார் கோவிலக்கட்டிப் புளுத்தப் போறம் எண்டு ஆயிரம் கல்ல வாங்கி அடுக்கிப் போட்டுப் போனாப்பல போதுமா? கல்லுகள அவனும் இவனும் தூக்கிற்றுப் போறானே எண்டு போட்டுத்தான் நான் மொத்தமாக் கொண்டுபோய் எண்ட வீட்டுக்கு அத்திவாரம் போட்டிருக்கன். நீங்க கோயில் வேலயத் தொடங்குங்கவன்.. கல்ல வாங்கித் தாறன்….

கல்லக் களவெடுத்துப் போட்டான் அப்பிடி இப்பிடி எண்டு உங்கட வீட்ட இருந்து கதச்சால்… பல்லக் கழட்டிக் கையிலதான் தருவன்!

இடிஞ்சுபோய்க் கிடக்கிற கந்தசாமி கோயில் கல்லையும் கழட்டப் போறன். ஏனெண்டால் அதுவும் எண்ட ஒரு மலட்டுப் பெத்தா கட்டிக் குடுத்த கோயில்தான். அந்தக் கோயிலுக்கு அவ எழுதின காணியத்தான் நான் குத்தகைக்குக் குடுத்து வாங்கித் தின்னுறன் நாப்பது வருஷமாக!… கோயில் இடிஞ்சி விழுந்தா கட்டுங்கவன்.. காணி தாறன். வயல் குத்தகையப் பத்தி உங்களுக்கென்னடா பேச்சு! அது என்ட பெத்தாட ஆதனம்!… சொத்தய உடைப்பன்! ஆரும் இனிமேல் கேட்டால்…?

இந்த அம்மன் கோயிலுக்கு ஏழு குடிக்கும் ஏழு வண்ணக்குமார் இரிக்காங்க எண்டு பேர்தான். உண்மையாக எண்ட குடிதான் ஊரில பெரியகுடி. கோயில்லேயே சீர்தூங்கிற வண்ணக்கு நான் ஒருவன் தாண்டா!

உங்களப் போல ஏதாவது ஒரு தொழில் பாக்கத் தெரியாமல் இல்லை. தொழில் பாத்தா கோயிலப் பாக்கொண்ணா எண்டு போட்டுத்தான் இந்தப் பெரிய குடும்பக்காறன் நான் ஒரு தொழிலுக்கும் போறல்ல. எங்கட குடிக்கு மட்டுமில்ல இந்தக் கோயில் பெரிய வண்ணக்கும் நான்தான். பூசாரிச் சின்னப்பன் என்ட கைக்குள்ள இரிக்குமட்டும் நாங்க நினைச்சதுதாண்டா சட்டம்! அந்தாளும் என்னப் போல கோயில் முழு நேர ஊழியகாறன்தான்.

எங்கட குடிக்குள்ள என்னப்பாக்கப் படிச்சவன் உத்தியோக காறன் எல்லாம் இல்லையா?

இரிக்கான்தான்.

பணக்காறன், படிச்சவன், எல்லாரும் இரிக்கான். வயது போன எத்தினையோ பேர் இரிக்கான். அவியளையெல்லாம் வண்ணக்குமாராக்காமல் நான் எப்படி வண்ணக்கா வந்தன் எண்டு தானே கேக்கயள். அதுதான் நம்மட ரெட்ட மூள தோழே.

ஆர்ர கோயில் எண்டு யோசிச்சுப் பேசுங்க. அம்மாளையும் தூக்கிற்றுப் போயிருவன். புண்ணியத்துக்கு கும்பிட்டுட்டுப் போகட்டும் எண்டு பாத்தன்..

கோயிலத் தின்னுறனாம் எண்டு சந்தில நிண்டு குசுகுசுக்கானுகளாம். கொண்டு போய்ப் பூட்டுறமாதிரிப் பூட்டிப் போடுவன். ஆரெண்டு தெரியுமா…? நான் தான் வண்ணக்கர் கண்ணாப்போடி! கவனம்!

Leave a Reply