ரகசியம் (குறும்புக் கதை)

மாசிலாமணி ஆசிரியர் என் கூடப் படிப்பிக்கும் வயதான ஆசிரியர். மகா உத்தமர்.

உலகத்திலே நடைபெறும் குழப்பம் குத்து வெட்டுக்களுக்கெல்லாம் மதுவும் மாதருமே காரணம் என்று அடித்துப் பேசும் அவர் தனது ஐம்பது வருட உலக வாழ்வில் ஒரு நாளாவது மதுவைத் தீண்டியது கிடையாது.

மனைவியை அன்றி மறு மாதரை மனத்தாலும் நினைத்துப் பார்த்ததுகூட இல்லை. “இவர் குரூபியாக பார்த்த பெண்கள் அருவருக்கக்கூடிய அவலஷ்ணமாக இருப்பதே அவர் இப்படி யோக்கியராக இருக்கக் காரணம்” என்று அவருடைய எதிரிகள், அதாவது மதுவும் மாதரும் ஆண்டவன் வழங்கிய பெரும் இன்பம் என்று கருதும் போகிகள், அவரைப்பற்றி கூறிக் கொண்டார்கள்.

எது எப்படியானாலும் இதுபற்றி மாசிலாமணி ஆசிரியரை நேரில் கேட்டுவிடுவதென்று துணிந்து அவர் என்னோடு தன் ஒழுக்க வாழ்வுபற்றி பெருமையாகப் பேசிக்கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் “ஏன் மாஸ்டர் உங்களுடைய ஒழுக்க வாழ்வின் ரகசியமென்ன?” என்று அவரைக் கேட்டு வைத்தேன். “இதிலென்ன இரகசியம் இளமையிலேயே எனக்கு நீரழிவு வியாதி வந்துவிட்டது!” என்றார் ஆசிரியர்.

Leave a Reply