போடிமகள் பொன்னம்மா

ஓமெண்றன்….

ஓலகங் கெட்ட கேட்டுக்கு!

எனக்கிந்தக் கத காலுகள் புடிக்காது கண்டயளோ!

என்ன கண்டறியாத கதகாலுகள்….

சொறிஞ்சிக்க நகமில்லாமக் கெடந்ததுக்கெல்லாம் ஒள்ளுப்பம் தராதலம் வந்திற்றெண்டாப்பல… இதுகளும் சந்தி சவையில பந்தி பாவாடையில மனிசன் மாஞ்சாதியெண்டு ஏறத்துவங்கிற்றாப்பல. இந்த ஊர உண்டாக்கினவன் ஆரு…? இதக்கட்டியாண்டவன் ஆரு..? நெனச்சிப் பாக்குதுகளா… ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு! அதுகளுக்கு வந்த பவுசும் தாக்கத்தும்! ஓமெண்றன்…

வெள்ளக் காச்சட்டையும் வீடு வளவும் வெள்ளாமையும் வந்திற்றெண்டாப்பல… இதுகள் பட்ட சிறுமானியங்கள் ஒண்டும் எங்களுக்குத் தெரியாதாகா… நாங்க எந்தச் சிங்கப்பூர் சீமையில இருந்து வந்தகா…ஆ? நான் லேசில வாயத் துறக்க மாட்டன்! துறந்தனோ… புறகு இவய சீலைக்க புடவைக்க ஒண்டையும் வச்சிரிக்கத் தேளுவல்ல! புட்டு புட்டு வச்சிருவன் வெட்டயால! இவியிர பொட்டுக் கட்டுகள் ஆருக்குத் தெரியாகா… கதைக்க வந்தித்துகள்! ஓங்கா… காலங்கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்…

களமுதறிக் கஞ்சி குடிச்சதுகள்;, எங்க பெத்தம்மையிர கோடி வேலி கட்டிக் கொண்டு போய்ப் புளச்சதுகள், அவண்ட இவண்ட கச்ச புளிஞ்சி காச்சி குடிச்சதுகள் எல்லாம் இப்ப மனிசனாப் போச்சிதுகள். சோறு தின்ற வட்டியையும் சேருவக்காலயும் கொண்டு குடுத்துப் போட்டு, பல்லக் காட்டி எண்ட மாமன் மானாகப் போடி பட்டற துறந்து அளந்து குடுக்க… திண்டு புளச்சதுகளெல்லாம்.. அதுகள் கக்குன வெண்ணொரைய மறந்து போய்.. பேசுற பேச்சுகள்ற தராதலத்தப் பாரு… ஒலகம் கெட்ட கேட்டுக்கு! ஓமெண்றன்

நான் இவியளுட்டயெல்லாம் என்ன கேட்டுப்போற… எட்டில தப்புல… ஒரு காக்கொத்து அரக்கொத்தரிசி கேட்டுப் போனாப்பல… இவியளுக்கு தாறத்துக்கென்ன? சும்மாவா… கடனக் கட்டப் பட்டு இறுக்காம செத்தா போயிருவன்…?

“என்னத்த நம்பி உனக்குக் கடன் தாறது? அரிசி அரிசியெண்டு வாங்கித்துப் போனாப்பல போதுமா? வாங்கினத்தத் திருப்பித்தர வேணுமே! உன்னப் போல பொண் புரசுகள் உளைச்சிப் புளைக்கல்லயா? ஏன் நீயும் என்னவும் தொழிலச்செய்தா என்ன?” எண்டு புது நாணயமான புத்தி சொல்லுதுகள்! அந்தக் காலத்தில எண்ட அப்பன் இதுகளுக்குச் சொன்ன கதயளப் பாடமாக்கி வச்சிருந்து இப்ப நமக்குச் சொல்லுதுகள் ஓங்கா!… ஒலகங் கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்….

எண்ட அம்ம என்ன அப்பிடி இப்படியா வளத்தவள்… அடல அடலயா சோத்தில பேத்து வச்சி, இள உறத் தயிர்ல… ஆடையோட வெட்டி வச்சி, கதலி வாழப்பழம் ஒண்டொண்டு முன்னங்கைப் பருப்பம் உரிச்சிப் போட்டு, சக்கரப் பாணியிலயும் கொட்டுவா அம்ம! ஆசையில போட்டு பினைஞ்சி போட்டு அப்பிடியே வட்டியோட போட்டுத்து எழும்பிருவன்! ஏங்கா… இந்த நசுக்குத்தீன் திண்டுதானாகா நீ ஆளாச் சங்கையா ஆகிற எண்டு கேப்பாவு அம்ம. நானுட்டுத்து எழும்பின வட்டிய வழிச்சி நக்குனதுகள்… நண்டியத்துப் பேசுதுகள். திண்டு கழிச்சதுகளிட்ட போக வேணும் கடன் கேக்க எண்டு முன்னுள்ளவன் சொன்னது பொய்யாகா பின்ன…? அறங்கையும் அத்துக் கிடந்ததெல்லாம் இப்ப பெரிய எடுப்படிக்குதுகள் ஓங்கா….! ஒலகங் கெட்ட கேட்டுக்கு ஓமெண்றன்!

அவர் ஒராள்.. அவர்ர வீட்ட வேலகாறிக்கு வரட்டாம். சோறுஞ் சீலயுமா நல்ல சொகமா இரிக்கலாமாம் மாதா மாதம் சம்பளமுந்தாறாராம்…! கொள்ளி கொத்துறவன் எண்டும் கோடிக்கு தண்ணி வைக்கிறவன் எண்டும் தட்டு வேலி கட்டுறவன் எண்டும் எங்கப்பண்ட அடும வேல வெட்டி செஞ்சி புளைச்சதுகள்… எத்தின ஆயிரம் பேர்… அப்பன் குடுத்த சோத்துக்கு கணக்கென்ன… சம்பளம் சாடிக்குக் கணக்கென்ன? அதெல்லாம் மறந்து போயுத்துகள்! இப்ப என்னடாண்டா அதுகள்ற அடுப்படி வேலைக்கு நம்மக் கூப்புடுதுகள்!

வெடியரசிப் போடியெண்டால் குடியெல்லாம் நடுங்கும். எண்ட அப்பன் அப்படி இப்பிடிப் போடியாகா…? அவர் ஊர்ப்போடி! போடி மகன் போடி… பரம்பரப் போடி! அவர் இந்த ஊரக் கட்டியாண்டாப்பல இன்னும் ஒருவர் பாக்கயா…? அதில வேலல்ல! சுதந்திர நெல்லு மட்டும் வாசல்ல அஞ்சி அட்டுவம். அட்டுவம் எண்டா அப்பிடி இப்பிடி அட்டுவமில்லக் கண்டயோ… அட்டுவத்துக்கு மேல நாடாங்கொடி ஏறிப்படந்து காய்ச்சிச் சொலிச்சுட்டுக் கிடக்கும்! வயிரவனுக்கு அடுக்கச் சாத்தின பொல்லுகள் போல அங்க கண்கொண்டுகள் பார்க்கொண்ணா… அதிர பசுந்து!

மாரி மழ வந்து அடச்சிப் புடிச்சிர வேணும்… கருத்தலப் பஞ்சம் வந்திரும். எங்கட வளவு வாசல் தாங்காது சனம்! அதுகள்ற பட்டிணியக் கேட்டு அப்பன் சிரிச்சிப் போட்டு அட்டுவம் துறந்து அவர் அளந்து குடுத்த நெல்லுக்கு ஒரு கணக்கா வழக்கா…!

நெல்லு வித்துக் காசுகள் கையில வந்திர வேணும். அப்பன் தட்டார மாங்குட்டிக்கி வியளம் சொல்லிக் கூப்புடுவாரு. ஒரு வரிசம் போட்ட நகை அடுத்த வரிசம் போடமாட்டம். அழிச்சி அழிச்சி வண்ணத்துக்கொண்டு செஞ்சி தருவார். அம்மையும் நாங்களும் பொன்காச்ச மரந்தான்! கோயில் கொண்டாட்டம் கூத்துக் கீத்தெண்டு வெட்டக்கிறங்கிற்றாப் பாக்கவேணும்… ஊர் தேசம் ஒதுங்கி நிண்டு… பாக்கும் அம்மையிர காசி மேசன் பட்டுப் புடவ நக நட்டயெல்லாம். எண்டம்ம இந்த ஊர்ல ஒரு ராசாத்தி மாதிரி இருந்து அரசாண்டவள்! இண்டைக்கு கழுத்தில கீர மணிக்கும் காதில ஓலச்சுருளுக்கும் வழியில்லாமக் கிடந்ததெல்லாம் இப்ப தராதலத்தில நிக்குதுகள்! நகயள இரவல் வாங்கிப் போட்டு போட்டு ஊரார் தேச்சுத்தள்ளுன எத்தின விராகன் பொன் எண்டு உங்களுக்கென்னடி தெரியும்! நேத்து நீ கண்ட தங்க நகய நாய் வாற கடப்பில கட்டு! நாயிர….. தேன் வச்சா நாய்தான் திரும்பி நக்கவேணும்! இயின திரியுறாரே மாய்ற்றரோ… ஓய்ற்றராம்! இவருக்கென்ன நான் சும்மா கிடந்தா..? சட்டி பானை வைக்கட்டாம்! பொட்டி சுளகு இளைக்கட்டாம்! இடியப்பம் புட்டவிச்சி விக்கட்டாம்… அதுகள்ல ஈனமில்லையாம்! ஓங்கா… ஒலகம் கெட்ட கேட்டுக்கு… ஓமெண்றன் எண்டப்பன் வெடியரசிப்போடி! நான் கெட்டாலும் செட்டி கிழிஞ்சாலும் பட்டு! இதுகள எண்ட சாதி சனம் சந்தானம் அறிஞ்சா நஞ்சத் திண்டு நாண்டுருவான்கள்! நான் பட்டினி கிடந்து செத்தாலும்… எண்ட குலத்துக்கு ஈனம் உண்டாக்க மாட்டன். எங்கட தகுத்துகள் இதுகளுக்கென்ன தெரியும்! அதுகள் செய்து புளைச்சத நமக்கும் சொல்லிப் பாக்குதுகள்!

ஊர்ல காசு தெண்டி எண்டப்பன் கட்டிக்குடுத்த கோயில் கிணத்தில தண்ணியள்ளிக் குடிச்சிற்றுக் கிடந்ததுகள்… நாம ஒள்ளம் தண்ணியள்ளப் போனா வக்கணம் கதைக்குதுகள். ஏன் எனக்குக் கிணறில்லாமயா… துலாந்து துலாக்கால் கழண்டு போய்த்து. ஆண் துணை இல்ல…அதப்போட்டுக்க. மண்ணுக்க கிடந்தா இறந்து போகுமெண்டு போட்டு வண்ணானுக்கு கொள்ளிக்கு வித்துப் போட்டன். அப்பிடி இப்பிடி துலாந்தா அது? திருக்கொண்ட வயிரம்! அப்பன் தேடிப்போட்டுக் கிடந்த படியா போன மாரிக்கு வித்துத் திண்டன். அதெல்லாம் இதுகளுக்கொரு பகுடி. துலாந்தையும் வித்துத் தின்றதா? எண்டு கேக்குதுகள்! கைவாளி கிணத்துக்க.. அது ஆறேழு மாசத்துக்கு முந்தி விழுந்த! மாரி மழ… எடுத்துக்கல்ல. அதுக்காக அடுத்த வீட்ல தண்ணி அள்ளுறல்லயா?…

இடியப்பக்காறி கடன் கேப்பாளே எண்டு போட்டு நித்திரக்காறி போல படுக்கன்… புட்டுக்காறி நேரத்தோட வந்து… தந்தாள். வாங்கிப் போட்டன். இடியப்பக் காறிக்கும் புட்டுக்காறிக்கும் போட்டி! இந்த விடியச் சாமத்தில அடுத்த ஊர்ல இருந்து… மழ தண்ணியெண்டு பாராம.. புட்டும் இடியப்பமும் அவிச்சிக் கொண்டு வந்து விக்காளுகள். இதுகளும் ஒரு புளைப்பா! இடியப்பக்காறி வாறாள் போல…. ஓ…ஓ…! அவள்தான். பேசாமப் படுப்பம்… அதுக்குள்ள இந்த நாசமத்த கொட்டாவி…. கோயில்ல சங்கூதுறாப் பல!…

கடங்காறர் நடயா நடந்தாப்பல நான் என்ன செய்யிற? கடனக் கட்டப் பட்டுத் திண்டத கடனக் கட்டப்பட்டுத்தான் இறுக்கவேணும். அதுக்காக… அப்பச் சட்டி வைக்க… அவியளுக்கு இவியளுக்கு ஊழியம் செய்யப் போகலாமா? அதெல்லாம் எண்ட குலத்துக்கு ஈனமெண்டு தான் சிவனே விதியே எண்டு… கிடக்கன். அதப்பாத்து இந்த ஊர்ல இரிக்கிற கஞ்சாங் கொத்திகள் என்னெல்லாம் கதகாலுகள் கதைக்குதுகள்… ஓங்கா…! ஒலகம் கெட்ட கேட்டுக்கு!…. ஓமெண்றன்!

Pages: 1 2

Leave a Reply