‘பசுநெய்’ விசுவலிங்கம்

நீங்க என்னப் பற்றி என்ன நினைச்சாலும் சரிதான் அதப்பற்றி எனக்கொண்டும் கவல கிடையாது.

ஏன்? எண்டு கேப்பியள். அது தான் தெரியுமே நம்மட போக்கு ஒரு தனிப்போக்கு எதுக்கும் கவலப்படாத போக்கு!

அண்டைக்குப் பாருங்க ஏறாவூர்ச் சந்தியில ஒரு கடக்காறன் வாற வரத்தில… வஸ்ஸ_க்குள்ள இருந்த என்ன வெளியால இழுத்துப் போட்டு மொங்கு மொங்கெண்டு மொங்கிப் போட்டான். நீங்கெண்டால்.. இன்னேரம் சவம்! நிண்டு பிடிச்சனா இல்லையோ? இந்த மண்ணாங்கட்டி உடம்பையும் தந்து இந்தப் பூமியில ஆண்டவன் நம்மப் படச்சுட்டது என்னத்துக்குத்தான் பின்ன? ஆரும் சோட்டப்பட்டவனுகள் அடிச்சு ஆசையத் தீர்க்கட்டுமே! நமக்கென்ன அதால குறஞ்சு போறது? நானோ ஒரு ‘விசினஸ் மன்’ இதுகளுக்கெல்லாம் பயந்துவிட்டால் தமிழண்ட பொருளாதாரம் எப்பிடி எழும்பும்? துணிஞ்சு இறங்கிற்றன். வாறதப் பாப்பம்!

வியாபாரம் எண்டால் வெறுமனே வேண்டி விக்கிற வேல மட்டும் அல்ல. உற்பத்தியும் நாமதான் விற்பனையும் நாமதான். அதால ஏதும் டேஞ்சர்கள் நடந்தாலும் நாமதான். ஆசுபத்திரிக்குப் போக வேண்டிய அலுவல்கள் ஏதும் நடந்து போனாலும் அதுக்கும் பொறுப்பு நாமதான்! ஆண்டவன் காவலாக இன்னும் அப்பிடி ஒண்டும் நடக்கல்ல. எட்டில தப்பில ஆரும் கைவச்சாலும் காயம் கீயம் கிடையாது! வியாபாரத்தில பொறுமைதான் முக்கியம் பாருங்க. நம்மட விஸ்னஸ் பிழையில்ல.

எங்கட ஊராக்கள் இருக்காங்களே அவங்க மண்ணில தயிலம் வடிச்சுத்தான் காலம் ஓட்டுறாங்க. அப்பா என்னயும் மாடு மேச்சு மணல்ல தயிலம் வடிக்கிற வேல தான் பழக்கப் பாத்தார். அது அவர்ர குலத் தொழில். மரக்கறித் தோட்டம் (காலை) நாட்டவும் வயலுக்குள்ள போய் வேலவெட்டி செய்யவும் தான் இவனுகளுக்குத் தெரியும்.

‘மாடுகள் மேய்த்து மடயனாய்ப் போகாமல்’ எண்டு எங்க பெத்தப்பா எண்ணச் சிந்து பாடிக் காட்டி இருக்கார் எனக்கு. அப்பனும் இவர்ர காலயும்! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டு வந்திற்றன்.

வெம்பு மணலும் வேகாவெயிலும் மனிசர உயிரோட கருவாடாக்கிப்போடும். வெம்பு மணலுக்க வேகாவெயில்ல குடம் தூக்கி தண்ணி ஊத்தவேணும். துலாக் கால்ல நிண்டு பகலைக் கெல்லாம் தூங்கவேணும். கால செய்யிறவனுகளப்பாத்தா அது விளங்கும். அவனுகள் நடக்கக்க பாக்க வேணும் முதுக. கூனி பூமியக் கொஞ்சப் போறாப்ப இருக்கும். மனிசச்சாங்க பாங்கமும் இல்ல! அது போனா வயலுக்க சுரிக்குள்ள போய் நிண்டு மாயவேணும்! எங்கட ஊரான் அரவாசிப்பேர் கசம் பிடிச்சுத்தான் செத்தவனுகள்! மணல்ல தயிலம் வடிச்சால் நமக்கும் அதுதான்!

இதெல்லாம் நமக்குப் பிடிக்கல்ல. நம்மட போக்கு ஒருதனிப் போக்கு எதுக்கும் கவலைப்படாத போக்கு! விட்டெறிஞ்சு போட்டு வெளிக்கிட்டன்.

கோயிலடிச் சந்தி. தேத்தண்ணிக்கட வாசல். நல்ல சுதியான இடம். ஆலமர நிழலும் அதுக்குக்கீழ மணலும் கடதாசிக் கூட்டமும் நல்ல தொழில். கொசுகடிச்சாலும் வருமானம் பிழையில்ல. வாறவன் போறவன் பாத்திற்று ஒரு தேத்தண்ணிய வீடிய வாங்கித்தராமப் போகமாட்டன். சில வேளையில திறீறோசுகளும் வந்து எண்படும். அது அண்டைக்கு நம்மட முழிவிசளத்தப் பொறுத்தது. கடையடிப் பிளைப்பு துவங்கின புதுசில ஒரு நாளைக்கு ஒரு இருபது முப்பது தேத்தண்ணி வீடி சுறுட்டு வெற்றிலை பாக்கு எண்டு ஆப்பிடும். போகப் போக ஒரு நாளைக்கு ஒரு பிளேன்டீ கிடைக்கிறதும் பொறுப்பு. நாம பாத்திற்று இருக்கக்குள்ளேயே கோழிச் சூடன் வாழப்பழமும் கேக்கும் துதளுமாத் திண்டு போட்டு பால் தேத்தண்ணியும் குடிக்கானுகள்! என்ன விசுவம் இவடத்த இருக்கிற எண்டு கேக்கான் இல்ல! முன்னாலயெல்லாம் வாங்கித் தந்தவங்கள்தான். போகப் போக நம்மட யாவாரம் படுத்துப் போச்சு! கடக்காறனும் முகம் தந்து கதைக்கிறல்ல. நானும் ஒரு ரோசக் காரன் கண்டயளே. அவடத்த விட்டு எழும்பியாச்சு.

என்ன செய்தாலும் அம்மா அம்மாதான். அப்பன் தோட்டத்துக்கு போன பிறகு தனியா இருப்பாவு. அந்நேரம் போய் பிடிப்பன் சரியான பிடி. காசு தாறயோ இல்லக் கடல்ல சாகட்டோ! எண்டாக் காணும். ‘அது வெம்பு மணல்ல தயிலம் வடிக்கிற காசி எனக்கென்னத்துக்கு? எண்டு ஏசிப் போட்டும் முடிச்சவுட்டுத் தருவாவு. ஆணெண்டும் அம்மைக்கு நான் ஒருவன் தானே! அதுதான் செல்லம்! அப்பனுக்கு என்னக் கண்ணில காட்ட ஏலாது. அவர் கிடக்கார்! எந்நேரம் பார்த்தாலும் மண்தோண்டுற தான் வேல!

காச வாங்கிற்று அவடத்த கிராம முன்னேற்றம் சங்க மண்டபத்துக்குள்ள போனா… என்னப் போல தோட்டம் துரவு செய்யாத நாகரிகமான நாலுபேர் வருவானுகள். கூடிற்றமோ… கந்தண்ட கமுக்கட்டுக்குள்ள தானே கடதாசிக் கூட்டம்! வெட்டுத்தான் நடக்கும்! வெண்டுத்தமோ… வெறியுந்தான், படமுந்தான், விருந்து வேடிக்கையுந்தான். அது பெரிய தடபுடல். ஒரு நாள் வெண்ட காசிலதான் இந்த நைலோன் சேட்டும் மணிக்கூடும் வாங்குன நான். நல்ல தொழில் தான். சில நாளையில கொண்டு போய் கொட்ட நூத்துப் போடும். நான் நைலோன் சேட்டும் மணிக்கூடும் கொம்பு மீசையும் கொண்டு திரியிறது எங்கட ஊரான் பகுதியானுக்குப் பிடிக்கல்ல. பொலிசில போய்க் குத்தி விட்டுத்தானுகள்! ஒருவன் நல்லாருக்கிறது மற்றவனுக்கு எரிச்சல்! அதுதான் இந்த ஊர் ஒருநாளும் நல்லா வரமாட்டாது கண்டயளோ! ஊரவன் ஒண்டுக்கும் விடமாட்டான்.

அவங்க பொலிசில சொன்னாப்பல நாங்க சும்மா இருந்திருவமா? குத்திக் குடுத்தவங்கட வீடுகள்ள மட்டும் இல்ல அவங்கட இனசனம் எண்டிருக்கிற ஆக்கள்ற வீடுகளிலயும் தான் இப்ப ஒரு கோழிக்குஞ்சுக்கும் வழியில்ல! ராவோட ராவா எல்லாம் புறக்கிப் போட்டம்! அதயும் பொலிசுக்குச் சொல்லிப் பாத்தாங்க. சொன்னாக்களத் தெரியும். அடுத்த நாள் ஆக்கள்ற கால வழிய மையோரிக் கிழங்கெல்லாம் மாயமாக மறஞ்சுது! ஏதும் தொழிலத் தொடங்கினா அதுக்கெல்லாம் விறேக்குப் போட்டா நாங்க என்னதான் தொழில் செய்யுற? ‘கிழங்கெல்லாம் கொண்டு போயித்தானுகள் வம்பில புறக்கிகள்!’ எண்டு கொம்பினாப்பல எங்களுக்கென்ன? நாங்க தொழில் செய்யிறம்! இந்த ஊர்ல அந்தத் தொழிலையும் பெருப்பிக்க வழியில்ல. கோழி – மரவள்ளிக் கிழங்கு – தேங்காய் – உரல் – உலக்க – அம்மி – குளவி – துருவில – அருவாக்கத்தி இப்பிடி என்னவுந்தான் கிடைக்கும். இதக்கொண்டு காலத்த எப்பிடி ‘றோள்’ பண்ணுற? நகநட்டு காசுபணம் உள்ள ஊரா இது? களிசர ஊர்! காஞ்ச பயலுகள்! கோழி வளக்கவும் பயப்படுறானுகள். எனக்கெண்டால் கடும் பொறுப்பு!

இடையில ஒரு நாள் அம்மையிர முறிஞ்சி போய்க்கிடந்த அட்டியலக் கிளப்பிற்று மட்டக்களப்பில கொண்டுபோய் வித்துப்போட்டு மலநாடு – மன்னார் யாப்பாணம் திருகோணமலையெல்லாம் ஒரு றவுண் அடிச்சன். இந்தப் பகுதிகள்ள மட்டக்களப்புப் பசு நெய்ணெ;டால் நல்ல மானம் எண்டு கேள்விப்பட்டன். காசெல்லாம் முடிஞ்சு போச்சு.

ஊருக்குத் திரும்பி வந்து சேரக்க எண்ட நைலோன் சேட் பக்கற்றுக்குள்ள சிங்கமார்க் வீடி ஒரு கட்டுக் குறையாக் கிடக்கு! காசு பச்சநாவி ஒரு சதமும் இல்ல! எப்படி நெய் விஸ்னஸ் தொடங்குற? கோயிலடிக் கடயில குந்திற்று இருந்து லயின் பண்ணிப்பாத்தால் ஒரு வழியும் இல்ல!

அம்மைய வளஞ்சு பாத்தன். இந்த முற அதெல்லாம் பலிக்கல்ல! தண்ணி குடிக்கிற செம்பத் தூக்கிக் கமுக்கட்டுக்குள்ள வச்சன். அப்ப வாறன் எண்டு போட்டு கடப்படிக்குப் போறத்துக் கிடயில சேல முடிச்சவிள் பட்டுத்து! ஆக ரெண்டு ரூபாய்க்கு மேல தரமாட்டாங்க. செம்பத்தூக்கி எறிஞ்சு போட்டு றோட்டுக்கு வந்தா படவிளம்பரம் சொல்றான். புதுமுகம் நிருவாண தேவி நடிச்ச படம்! அதப் பாக்க இந்த நெய்யாவாரம் எனக்குப் பெரிசில்ல கண்டயளோ!

Pages: 1 2

Leave a Reply