தலம வாத்தியார் தம்பிராசா

தலம வாத்தியார் வேல பாக்கிற தெண்டால் அது லேசான காரியம் இல்லப் பாருங்க. பெரும் பொறுப்பு! உங்கட ஐடியா என்னவோ எனக்குத் தெரியாது. என்னப் பொறுத்தவரையில சொல்றன் அது பெரும் பொறுப்பான ஒரு பதவி!

ஒரு சில தலம வாத்திமார் சொல்றாங்க.. அது மிச்சம் சிம்பிள் எண்டு! அது சிலவேளையில உண்மையாகவும் இருக்கும். அப்படிச் சொல்றவங்க கொஞ்சம் அறிவு ஆற்றல் அது இது எண்டு கொஞ்சம் மூளையும் உள்ளவங்க. இவங்கட அறிவும் ஆற்றலும் மூளையும்.. இந்தக்காலத்தில செல்மதியாகாது கண்டீங்களோ! இப்ப உத்தியோகம் – அதுவும் வாத்தியார் வேலை பாக்கிறதெண்டால் சுழிக்கத் தெரியவேணும்!

அந்தக் காலத்தில ஒரு வாத்தியாராக வாறதெண்டால் பெரும்பொறுப்பு! அதுவும் றெயின் ரீச்சரெண்டால் என்ட கடவுளே… அவன் பெரிய ராசா! குறைஞ்சது ரீச்சர்ஸ் சேட்டிபிகற் இருக்க வேணும்! இல்லாட்டி பிறிளிம் சோதினை பாசு பண்ணினாலும் வாத்தியாராகேலா! அது பெரும் பொறுப்பு!

அப்படியான காலத்திலேயே பிறிளிம் சோதனையோட வாத்தியார் வேல பாத்தவன் நான். ஏன் நான் ரீச்சர்ஸ் சேட்டிபிக்கற் சோதனையும் ஒருதரம் ரெண்டுதரமில்ல. ஒன்பதுதரம் மோதிப்பாத்துப் போட்டு விட்டெறிஞ்சு போட்டுத் திரியக்குள்ளதான்.. மிஷன்காறங்கள் எங்கட ஊர்ல பள்ளி கட்ட வளவொண்டு வேணுமெண்டு வந்து பட்டாங்க… வாச்சாலும் வந்து வாச்சுது! என்ர மாமன்காறன் கணபதிப் போடிதான் அப்ப பொலிஸ் தலமக்காரன்! அவர்ர படிப்புக்காக கிடைக்கல்ல பொலிஸ் தலமக்காரன் உத்தியோகம்! அவர்ர உடம்புக்காகத் தான் கிடைச்சது!

வெள்ளக்கார ஏஜென்ட் விண்ணப்பம் அனுப்பியிருந்த ஆக்களுக்கு நேர்முகப் பரீட்சையொண்டு வச்சு நியமனம் கொடுக்கத்தான் வந்தவன். அந்தக் காலத்தில அஞ்சாந்தரம் படிச்சவன் தான் பெரிய படிப்பாளி! எங்கட ஊரான் மூணு பேர் அப்பிளிக்கேஷன் போட்டாக்கள். அஞ்சாந்தரமும் படிக்காதாக்கள் பொலிஸ் தலமக்காறன் நியமனத்த புதுனம் பாக்கப் போனவர்தான் எண்ட மாமன் கணபதிப்போடி! அப்பிளிக்கேசன் காரனுகள் ஆக்கள் தோற்றம் காணாது. என்ர மாமன அண்ணாந்து பாத்தான் வெள்ளக்காறன். நீதான் சரியான ஆள். பொலிஸ் தலமக்காறன் நீதான் என்டானே! மாமன் கணபதிப்போடி ஆள் பெரிய மாமலை! எனக்கு கை ஒப்பம் வைக்கவும் தெரியாய்யா.. நான் எப்பிடி உத்தியோகம் பாக்கிறது. வேணாமய்யா எண்டாராம்! வெள்ளக்காறன் விடல்ல! அவர்தான் பொலிஸ் தலம!

மாமன் கொடுத்த ஒரு புரன் வளவுத் துண்டுக்குள்ள மிசன்காறன் பள்ளி கட்டிப் போட்டான். அப்பதான் ஒரு ராத்திரி சாப்பிட்டுப் போட்டுப் படுக்கன்… பத்து மணியிருக்கும்… அந்நேரத்திலதான் எனக்கு மூள நல்லா வேல செய்யும்.

அடுத்த நாள் மாமன் பொ.த.கணபதிப் போடியாரிட்ட உடைச்சன் சங்கதிய. அவர் போய் மனேச்சரக் கண்டு பள்ளி கட்ட வளவு தந்தவன் நான். எண்ட மருமகப் பொடியன் ஒருவன் பிறிளிம் பாசு பண்ணிற்று வேலல்லாமத் திரியுறான். நம்மட பள்ளியில பாத்து படிப்பிக்க ஒரு இடம் குடுக்க வேணும் துர! எண்டார். இடந்தரலாம் அவர் மதம் மாற வேணும் எண்டான் வெள்ளக்காற மனேச்சர். திருநீறு சாத்திறத்த விட்டன். வாத்தியார் வேல.. கையோட கட்டளை!

பள்ளிக்குப் போனால்… அவர் ஒரு கண்டறியாத தலம வாத்தியார். குடும்பியும் ஆளும்! எல்லாத்துக்கும் பெரிய லோ! பள்ளிக்குள்ள நிண்டாப்பல அவசரமாக ஊருக்குள்ள ஒரு அவசரத்துக்கு போகப்படாதா? அதுக்கும் அவரிட்டக் கேக்கவேணும். பெரிய கண்டறியாத லோ! ஒருநாள் அவரிட்ட சொல்லாம ஊருக்குள்ள போய்த் திரும்பி வந்தா பெரிய அட்டகாசமும் லோவும் பேசுறார்! கொஞ்சம் பாவிச்சுற்றுத்தான் வந்தனான்! அதுக்குத்தானே போனதும்! போறபோக்கில பிடிச்சன் தலம வாத்தியார்ர குடும்பியில அவ்வளவுதான்… சங்கதி. மூணாம் நாள் வேலைக்குத் தொப்பி போட்டுட்டான் தலம வாத்தி! வேலயில நிப்பாட்டியிருக்கெண்டு கடிதம்! ஆக மூணுமாசம்! உத்தியோகம் அற்பாயுளா போச்சு!

இனியென்ன? என்னோட கொளுவி – வேலயையும் அறுத்துப்போட்டு எண்ட சொந்த ஊர்ல.. அதுவும் என்ர மாமன் கொடுத்த வளவுப் பள்ளியில இவர் தலம வாத்திவேல பார்த்துப் போட்டுப் போகவா? ஒவ்வொரு ராவும் கண்முழிப்புத்தான்! விடிஞ்சால் பயிரப்பிடுங்கிப் போட்டானுகள். மேடையில ரெண்டுக்குப் போயிருக்கானுகள் மேச கதிரயக் காணல்ல! இதுதான் தலம வாத்தியாருக்கு ஒப்பாரி!

ஒருநாள் தலம வாத்தியார் ஊர்ல இல்ல. மனிசியும் பிள்ளையளுந்தான் தனிய பள்ளிக்குள்ள. மனிசியெண்டால் நல்ல வடிவு. தாலிக் கொடியெண்டால் தாமரக்கிழங்கு மாதிரி!

பள்ளி அறைக்குள்ள யன்னலோரம் கட்டில். மனிசி கட்டில்ல கால் நீட்டியிருந்து பிள்ளைக்குப் பால் கொடுக்கிற சமயம்! யன்னலுக்குள்ளால கழுத்தில போட்டன் கைய! அவ்வளவுதான் தெரியும் நாய் கடிச்சாப்போல! நாசமத்துப் போவாள். பிள்ளையையும் விட்டுப் போட்டு… புறங்கைய பிடிச்சுச் சப்பிப் போட்டாள்! கையப் பறிச்செடுத்துக் கொண்டு ஓட… கள்ளன் கள்ளன் எண்டு கத்தத் தொடங்கிற்றாளே..வே…!

அடுத்த நாள் தலம வாத்தி வந்திறங்கிற்றான். மாமன் பொ.த. அறிஞ்சால் என்ன கதி! பெண்ணும் தரமாட்டானே மனிசன் எண்டு பயந்து போய் காச்சலோட பொத்திற்று படுக்கிறன். வாத்தி லொக் என்றியும் போட்டுத்து மாமனையும் தேடி வந்திற்றான். என்னில தான் சந்தேகம் எண்டு சொல்லிப் போட்டானே! மாமன் கூப்பிட்டு வரக்காட்டி கையைக் காட்டச்சொன்னா..! எப்பிடிக் காட்டுவன். உலக்கையை எடுத்தான் மனிசன் அண்டைக்கு நான் செத்திருப்பன். நானும் தலம வாத்தி வேல பாக்கவேணும் எண்டு தலையில எழுயிருக்கக்குள்ள எப்பிடிச் சாகிறது? மாமன் வாத்தியிர கால்ல

அதுக்குப்பிறகு பத்துவருசம் கழிச்சு திருக்கணாமலை டொக்கியாட்டுக்குள்ள ஒரு ஒவிசர் வேல பாத்துக் கொண்டு திரியக்குள்ளதான். சீனியர் பாஸ் பண்ணின ஆக்களை வெங்காய வாத்தியாராகப் போடுறாங்களாம் எண்டு கேள்விப்பட்டு ஒரு ஆளப்பிடிச்சு நானும் ஒரு அப்பிளிக்கேசன் போட்டன்…

பணிக்கன்காமத்துப் பள்ளிக்கு வெங்காய வாத்தியாராகப் போட்டாங்க. அது ஒரு ஆனக்காட்டுக்குள்ள பள்ளி! பொழுது போறதெண்டால் பெரும் பொறுப்பு. என்ட மனிசியும் அப்ப அந்தப் பள்ளியிலதான் படிப்பிக்கிறாவு. அவ ஆள் ஒரு றவ்வாணம்! பொழுது போக வேணுமே.. கதைக்கப் பேசத் தொடங்கினம்! அங்கால தெரியாதா.. கொளுவிற்று! தலம வாத்தியாரும் ஒரு நல்ல மனிசன்! பெட்ட றெயினிங் ரீச்சர்.. என்றாலும் இணங்கிற்றாள். ஆள் எலும்பும் தோலும் எண்டாலும்.. நல்ல குணம்.. கடசி வரையும் நம்பிற்றாள்! இனியென்ன செய்யிற கச்சேரிக்குப் போனதான்!

கலியாணம் முடிச்ச நாளைக்கு எடுக்கிறன் எடுக்கிறன். கொல்லு கழுத்தறு! எங்கட மூணாம் பெட்ட பிறந்திற்றாள் நான் றெயினிங் கொலிச்சுக்குப் போகக்குள்ள. அதுவும் எத்தின சுழிப்புகள். எம்.பி. தான் உதவி செய்தவர். மனிசி காசு கட்டிக் கிட்டி செட்டிபிக்கற்றோட வெளியால வந்திற்றன். றெயின் ரீச்சராக வாறெண்டா சும்மாவா? அது பெரும் பொறுப்பு! …அதுக்குப் பிறகுதான் இவள நான் கலியாணம் முடிச்சிருக்கப்படாது எண்ட எண்ணம் வந்தது. நான் றெயினிங் ரீச்சரான பிறகும் ஏதும் சண்ட கிண்ட வந்தால் இண்டைக்கும் கூட நான் ஒரு தலம வாத்தியெண்டு மதியாமல் வெங்காயம்! வெங்காயம்! எண்டுதான் பேசுறாள்! இனியொண்டும் செய்ய ஏலாது பாருங்க.. பென்சனுக்கும் போகப் போறன்!

மிசன் பள்ளியெல்லாம் அரசாங்கம் எடுத்த பிறகு எண்ட சொந்த ஊர் பள்ளியில தலம வாத்தியார்ர இடம் காலியெண்டு கேள்விப்பட்டன்! வெங்காய வாத்தி றெயின் ரீச்சர் சேவிஸ் எல்லாம் ஆகப்போகப் பதின்மூன்று வருஷந்தானே! சேவிஸ் காணாது எண்டானுகள்!

ஒரு எம்பியை பிடிச்சு கயிறு குடுத்து ஒரு சுழிசுழிச்சன். எங்கட ஊர்ல ஒரே ஒரு வாத்தியார் நான்தானே! ஏன் தலம வாத்தியா வரக்கூடாது எண்டு ஒரு போடு போட்டன். ஊராக்களையும் பிடிச்சு உடைச்சன் ரெண்டு மூணு! தம்பிராசா சேவை எங்கட ஊருக்கு உடனடியாகத் தேவை! போய் இறங்கிற்றானுகள் டிப்பிட்டேஷன். பிறகென்ன பாருங்க ஊரோட தலம வாத்தியாராக வந்திற்றன். சும்மாவா அது பெரும் பொறுப்பு!

Pages: 1 2

Leave a Reply